‘தமிழ் தலைமைகள் தூரநோக்கற்ற செயற்பாடு’:மு.சந்திரகுமார்

தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே
குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2020 ஜனாதிபதித் தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.

இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகளைக் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன.

அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும் என்ற அவசிய நிலை, இவற்றுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது.

இன்று அந்தநிலை இல்லாமலாக்கப்பட்டு, அதைப்பற்றிப் பேசாமலே தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளை எப்படியும் பெற்றுவிடலாம் என இந்தத் தரப்புகள் நம்பும் துணிகரமான நிலை உருவாகியுள்ளது.

இதற்கு தமிழ் பேசும் அரசியற் தலைமைகளின் தூரநோக்கற்ற அரசியல் அணுகுமுறைகளும் காரணம். இந்தச் சிக்கலான நிலையில் எந்த வேட்பாளரை நாம் ஆதரிப்பது என்ற நியாயமான கேள்வி மக்களிடத்திலே எழுந்துள்ளது.

இலங்கைத்தீவில் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உலகறிந்தவை. இந்தத் தரப்பினராலும் கூட கடந்த காலத்தில் இவை உத்தியோக பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

இதன்படி இவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் இவை பங்கேற்றும் உள்ளன.

அவ்வாறு இவர்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இன்னும் தீர்வு காணப்படாமல், தீர்வை நோக்கிய நிலையிலேயே இருக்கும்போது அவற்றைப் பேசாது கடந்து செல்ல முற்படுவதானது மிகமிகத் தவறானதாகும்.

அத்துடன் இது நீதி மறுப்புக்கு நிகரான, ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே கருதவும் இடமளிக்கிறது.

இந்த நிலையானது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளை எழுப்புவதுடன், இந்த வேட்பாளர்களின் அரசியல் நிலைப்பாட்டைக்குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே இதைக்குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே, இன்று உருவாகியிருக்கும் இந்தச் சிக்கலான விவகாரத்தை மிகுந்த அவதானத்தோடும் உச்சப் பொறுப்புணர்வோடும் தமிழ் மொழிச் சமூகங்கள் கையாள வேண்டும் என்பதே சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினுடைய வேண்டுகோளாகும்.

அதிலும் தமிழ்த் தரப்பினருக்கு இதில் இன்னும் கூடுதல் விழிப்பும் பொறுப்பும் தேவைப்படுகிறது என வலியுறுத்துகிறோம்.

இதற்கமைய தமிழ் மொழிச்சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் வகைப்படுத்தி வேட்பாளர்களின் முன்னே கூட்டாக முன்வைப்பதன் மூலம் எமது மக்களின் நியாயங்களுக்கு அவர்கள் உத்தரவாதமளிக்கும் நிலையை உருவாக்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு நிபந்தணைகளின் கீழ் சில கோரிக்கைகளையும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!