பெண்களுக்கு பெருமை சேர்க்கும் முயற்சியில் நாசா   

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள, விண்வெளி வீராங்கனைகள், எதிர்வரும் 21ஆம் திகதி, விண்வெளி வீரர்களின் துணையின்றி தனியாக விண்ணில் நடக்கவுள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.

விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வது வழமையாக உள்ள நிலையில், இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை.

விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது நடைமுறையாக இருந்து வருகின்றது.

1965ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 பெண் வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று செயற்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஆண் வீரர்களின் துணையுடனேயே தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 29ஆம் தி கிறிஸ்டினா கோச் மற்றும் ஆன் மெக்லைன் ஆகிய 2 வீராங்கனைகள் மாத்திரம் விண்வெளியில் நடந்து ஆய்வு மையத்தின் வெளியில் உள்ள மின்கலங்களை மாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் விண்வெளியில் பயன்படுத்தும் ஆடைகளின் பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் முயற்சியில் ‘நாசா’ மீண்டும் களமிறங்கியுள்ளது.

இந்த வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய 2 வீராங்கனைகள் எதிர்வரும் 21ஆம் திகதி, ஆண் வீரர்களின் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.

இது வரலாற்று சாதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!