ஜனாதிபதி தேர்தல்: 35 பேர் வேட்புமனுத்தாக்கல்

நாட்டின் 8ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் 35 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வு காலை 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது பிராதன அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் உட்பட 35 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

வேட்பு மனுத்தாக்கலின் பின்னர், வேட்புமனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்
தலைவரால் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்போது 2 பேர் மீது ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஆட்சேபனைகளை நிராகரித்தது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில், சமல் ராஜபக்ச, குமார வெல்கம உட்பட 6 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், 35 பேரே வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வேட்பாளர்கள் தேர்தல் காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்;பில் விளக்கமளித்தார்.

குறிப்பாக வேட்பாளர்கள், ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களை தேர்தல் நோக்கோடு பயன்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், இன்று இடம்பெற்றிருந்த நிலையில், ராஜகிரிய பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அத்தோடு தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல்களை கருத்தில் கொண்டு அப் பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளும் மாற்றியமைக்கப்பட்டிருந்ததோடு, சில பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!