ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது…   

ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடுகளின் மூலம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தாம் தயார் என்று இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பிரதி அமைச்சரின் நடவடிக்கை காரணமாகவே, தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாதுள்ளதாகவும், அவரின் செயற்பாடுகள், தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்தும் வகையில் அமைவதாக மனுர பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இன்று அல்லது நாளைய தினத்தில் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தாங்கள் இணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே பணியாளர்கள் உடனடியாக சேவைக்குத் திரும்ப வேண்டும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ நேற்று அறிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் ரயில்வே தொழிற்சங்க போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!