அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதிக்கான மருத்துவ பரிசோதனை

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, முதன்முறையாக வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களை சேர்ந்த சாரதிகளின் உடற்தகுதிக்கான இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் தொடர்பிலான கூட்டம் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர்,

இந்த நிகழ்வின் முதற்கட்டமாக வீதி பாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள சுமார் 500 அரச அலுவலக சாரதிகளின் உடற்தகுதி பரிசோதனை இடம்பெறவுள்ளதுடன், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த உடற்தகுதிப் பரிசோதனை சாரதிகளுக்கு பரிசோதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆளுநரின் வழிநடத்தலில் வடமாகாண ஆளுநர் செயலகம், வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் வடமாகாண வீதி பாதுகாப்பு சபை என்பன இணைந்து வீதிப்பாதுகாப்பு வாரத்தின் முதல் நாள் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து துரையப்பா விளையாட்டு மைதானம் வரை விழிப்புணர்வு நடைபவனி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது ஏனைய மாவட்டங்களிலும் இந்த நடைபவனி அந்தந்த மாவட்ட செயலகங்களில் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன் வீதி பாதுகாப்பு வாரத்தின்போது மாவட்ட ரீதியில் இரண்டு சாரதிகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு சிறந்த சாரதிகள் இருவருக்கான பதக்கங்களும் ஏனைய சாரதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பாடசாலை மட்டங்களில் போட்டிகள், வீதி நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படம் மற்றும் துணுக்கு போட்டிக்கான ஆக்கங்களை அனுப்பிவைப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 10 ஆம் திகதியாக பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!