மாலை 6 மணிக்கு கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனுவின் தீர்ப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடர்பாக சகல தரப்பினரும் தங்களது ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 க்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு இன்று (04) மாலை 6 மணிக்கு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (04) காலை குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாக குறித்த பத்திரங்களை ரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றினை வௌியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!