கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனு மீது இன்று மீண்டும் விசாரணை!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை, இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் பாதூப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் யசந்த கோத்தாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியர்சர்கள் முன்னிலையில், இந்த மனு நேற்று மதியம் 1.30 முதல் மாலை 6.15 மணி வரையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மனு மீதான விசாரணைகளை, இன்று காலை 9:30 மணி வரை ஒத்திவைப்பதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழு அறிவித்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவை, இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து, கடந்த திங்கட்கிழமை காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு, இரட்டைப் பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் போலியானது எனத்தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோட்டபாய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென, இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!