சஜித்துடன் த.தே.கூ செய்துகொண்ட உடன்படிக்கை என்ன? – ஷிஹான்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, தேர்தலுக்கு முன்னர், சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தி, வடக்கு மக்களை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஷிஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக திறந்து வைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதனூடாக தேர்தல்கள் சட்டங்கள் மீறப்படுவது அப்பட்டமாக தெரிகிறது.

யாரை இந்த அரசாங்கம் ஏமாற்றுகிறது? வடக்கிலுள்ள தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு ஏமாற்றப்பட்டதை பார்க்கிலும், இரு மடங்கில் அவர்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

திறக்கப்படவுள்ள விமான நிலையம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா? சர்வதேச பாதுகாப்புக் கட்டமைப்பிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறதா? யாரை ஏமாற்றப்பார்க்கின்றார்கள்?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வடக்கு மக்களுக்கு இவ்வளவு செய்திருக்கின்றோம் என்பதை காண்பிக்கவா இது செய்யப்படுகிறது?

‘வடக்கிலுள்ள அரசியல்வாதிகளை, இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்ற போதிலும், வடக்கு மக்களை அரசாங்கம் கவனிப்பதே இல்லை.

வடக்கு மக்களின் வாக்குகளை பெறுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகவே சஜித் பிரேமதாஸவுடன், சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? நிபந்தனைகள் என்ன?
நிபந்தனைகளை சஜித் பிரேமதாஸ அறிவாரா? அதுகுறித்து நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தங்களது மக்களுக்கு ஒன்றையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறம் கூறினாலும், இன்னுமொரு புறத்தில் அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயார் என்று கூறுகின்றார்கள்.

அதனால் இந்த ஒப்பந்தம், நிபந்தனைகள் என்ன என்பதை அம்பலப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!