கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள்!

2008 ஆம் ஆண்டு, ஆயுத குழு ஓன்றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை, பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்களப்பில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சடலத்தினை தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த 2008 ஆம் ஆண்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில், தனது இறுதி நாள் கடமையை மேற்கொள்வதற்காக, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்களான, மகிழன் என அழைக்கப்படும் மேரி அன்ரனிபோல் அஜதீபன், மதன் என அழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என அழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை, சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி போன்ற இடங்களில் வைத்து, கடந்த மார்ச் மாதம், குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர், கடத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு, கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து, குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை உதவி இன்பெக்ஸ்டர் என்.நவரெட்ண, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், கடந்த மாதம் 23 ஆம் திகதி அனுமதி கோரியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில், சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில், கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன், இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும், ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் என்பவர், கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மேலதிக தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!