அரசியல் தீர்வு தொடர்பில் இரா.சம்பந்தன் கவலை!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும், இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திடம், இந்த விடயம் தொடர்பில், இரா.சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், தமது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் செயற்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக, விசேட பிரதிநிதி தாரிக் அஹமத், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை, நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
தமிழ் மக்களாகிய நாம் எமக்கென ஒரு வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்டவர்கள்.

நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான ஒரு அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக உள்ளோம்.

நாங்கள் பிரிபடாத, பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன்றையே வேண்டுகிறோம்.
நாங்கள் அனைவரும் இந்த நாடு செழிப்புற வேண்டுமென்றே விரும்புகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் விளக்கிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இது வரையிலும் எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாமை குறித்து கவலை வெளியிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!