எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள், என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் – கோட்டா!

சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாத தலைமைத்துவம் ஒன்றை நாட்டில் கட்டியெழுப்ப, அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விசேட மகா சம்மேளன கூட்டம், குருநாகல் – சத்தியவாதி மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை செய்து, இராணுவத்தினர், மதத் தலைவர்கள் மீது பழிவாங்கலை செய்து, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போது, நாங்கள் மக்கள் என்ற வகையில் குழுவாக இணைந்தோம்.

அரசியல் ரீதியாக மிகப்பெரிய பயணத்தை மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பித்தோம். அதற்கமைய முன்னிலையில் நாங்கள் உள்ளோம்.

ஜனநாயக வெற்றியை பெற முடியாது என்பதை அறிந்துகொண்டு, பல்வேறு சூழ்ச்சிகளை எமக்கு எதிராக மேற்கொண்டாலும், நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்வோம் என்பதை அறிவிக்க விரும்புகின்றேன்.

மக்களுடனும், தொழில்துறையினர், வர்த்தகர்கள், முயற்சியாளர்கள் அனைவரையும் நாங்கள் இணைத்து, பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளோம்.

என்ன வகையிலான பொருளாதார நெருக்கடி இருந்தாலும், அன்று இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பதை, பாதுகாப்புச் சபை மாநாட்டில், ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினேன்.

அதற்கான அனுமதியை மஹிந்த ராஜபக்ச வழங்கியதற்கமைய, 3 இலட்சம் படையினரை இணைத்துக் கொண்டதற்கு இணங்கவே, போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

இந்த நிலையில் தற்போது நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் மட்டுமல்ல, அவற்றை அமுல்படுத்துவதற்கான குழுவும் எம்மிடத்தில் உள்ளது.

ஆகவே இந்த நாட்டை செழிப்புள்ள நாடாகவும், வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாமல் தகுந்த தலைமைத்துவத்துடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிக்கு, பங்குதாரர்களாக அமையும்படி கேட்டுக் கொள்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!