முல்லை, ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் கட்டடம் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்குரிய கட்டடமும் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில், நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நடமாடும் மருத்துவ சேவைக்குரிய, கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வடமாகண முன்னாள் சுகதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கோரிக்கைக்கமைய, கடந்த மூன்று வருடங்களாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய, நடமாடும் வைத்திய சேவைக்கான நிதியினை, கனடா நாட்டின் புலம் பெயர் தமிழ் அமைப்பான, கனேடியத் தமிழர் தேசியப் பேரவை அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

எனினும் ஏறக்குறைய கடந்த மூன்று மாதங்களாக இந்த நடமாடும் சிகிச்சைக்கான, நிதியில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்து குறித்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய குறித்த நடமாடும் சிகிச்சை சேவைகளை மீண்டும் செயற்படுத்தும் பொருட்டு, சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் வைத்தியர் மற்றும் பேராசிரியருமான குபேரன் என்பவர் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு இச் சிகிச்சை சேவைகளுக்குரிய நிதியை வழங்க முன்வந்திருந்தார்.

இந்நடமாடும் சிகிச்சை சேவையின் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, 180இற்கும் மேற்பட்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு வருடத்திற்கு பயன்பெற முடியும்.

நடமாடும் மருத்துவ சேவைகளுக்குரிய கட்டடத் திறப்பு நிகழ்வில், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மு.உமாசங்கர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன், ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி கெங்காதரன் கஜானா, மாஞ்சோலை வைத்திய அதிகாரி செ.கஜன், வைத்தியசாலைத் தாதியர்கள், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!