மட்டு, விவசாயிகளுக்கு அறிவூட்டல் செய்யும் விசேட வேலைத்திட்டம்

காலநிலை மாற்றத்திற்கேற்ப பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் முறை குறித்து, விவசாயிகளுக்கு அறிவூட்டல் செய்யும் விசேட வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில், விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிறீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட விவசாய பணிப்பாளர் வீ.பேரின்பராசா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாஸித், விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஈ.சுகுந்ததாசன் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும்போது ஏற்படும் வரட்சியினைக் கருத்திற்கொண்டு நீரை சேமித்தல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் பயிர்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை பீடை நாசினி உபயோகம் தொடர்பாக இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் ‘சிறந்த விவசாய நடைமுறை’ திட்டத்தின்கீழ், சேதனப்பசளை தயாரித்தல் மற்றும் உணவுப் பண்டங்களை தயாரிக்கும் முறைகள் குறித்த செயன்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

சேதனப் பசளையினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு சந்தை வாய்ப்பும் வழங்கப்பட்டது.
உள்ளூர் விவசாயிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!