வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் உயிரிழப்பு    

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் வாள்வெட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து, மூன்று வார காலமாக சிகிச்சை பெற்றுவந்த இரும்பக உரிமையாளர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் உப்புமடச்சந்தியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றினுள் கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிளில் புகுந்த கும்பலொன்று உட்புகுந்து, அட்டூழியத்தில் ஈடுபட்டதோடு, இரும்பகத்தில் காணப்பட்ட கட்டை ஒன்றினால், உரிமையாளரை தலையில் தாக்கிவிட்டு, தப்பித்துச் சென்றது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரும்பக உரிமையாளராக 47 வயதுடைய கந்தையா கேதீஸ்வரன் என்பவர், கடந்த 24 நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ‘இரும்பக உரிமையாளர் மீது தாக்குதல் இடம்பெற்ற சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் உரிமையாளரைத் தாக்க கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்ததாகத் தெரியவருகிறது.

அத்தோடு தாக்குதல் இடம்பெற்று மூன்று வார காலமாகிய நிலையிலும், தாக்குதலாளிகள் தொடர்பில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!