அரசாங்கதின் அரசியல் பழிவாங்கல் ஓயவில்லை – மகிந்த

தற்போதைய அரசாங்கம், தமக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எனக்கு ரணில் விக்ரமசிங்க பேசிய ஒரு கருத்து நன்றாக நினைவில் உள்ளது. 2015 தேர்தலின் போது, தலவாக்கலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தார்.

அத்தோடு, 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இவர்கள் 5 ஆயிரம் வீடுகளையேனும் நிர்மாணித்தார்களா என்று தெரியவில்லை.

இந்திய அரசாங்கத்தினாலேயே 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் எத்தனை வீடுகளை அமைத்தார்கள் என்று தெரியாது.

இவர்கள் அவ்வளவு வீடுகளை நிர்மாணிக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். சம்பளப் பிரச்சினை வந்த போது, நான் பிரதமராக இருந்தேன்.

அப்போது, அதனைத் தீர்க்க முயற்சிகளை எடுத்தபோதுதான், நீதிமன்றினால் எனக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை.

நாம் ஆட்சியில் நீடித்திருப்போமானால், நிச்சயமாக சம்பளத்தை உயர்த்தியிருப்போம். கடந்த காலங்களில், அரசாங்கம் எமக்கு எதிரான பழிவாங்கலையே மேற்கொண்டது.

கோட்டாவை எவ்வாறு சிறையில் தள்ளுவது, பசிலை எவ்வாறு சிறையில் தள்ளுவது என்றுதான இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது குடும்பத்திலுள்ள முதியவர்களைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு, எம்மை எவ்வாறு சிறைக்குள் தள்ளுவது என்பது குறித்து மட்டுமே சிந்தித்தார்களே ஒழிய, நாட்டுக்கு வேலை செய்ய வேண்டும் என்று இவர்கள் சிந்திக்கவில்லை. இதனைத்தான் இவர்கள் இன்றும் மேற்கொள்கிறார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!