கோட்டபாயவிற்கு எதிரான மனு 2ஆம் திகதி விசாரணைக்கு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை, இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 2 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில், மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

காமினி வெயாங்கொட, சந்ரகுப்தா தெனுவர ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் போது, கோட்டபாயவின் இலங்கை குடியுரிமை குறித்து, நீதிமன்றத்தில் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்சவுக்கு இரட்டை குடியுரிமை காணப்பட்டமையினால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால், கோட்டபாய தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து, அது தொடர்பான ஆவணத்தை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து, இலங்கை குடியுரிமை மாத்திரமே தான் பெற்றுள்ளதாக அவர் உறுதி செய்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களமிறங்கியுள்ளார்.

ஆனாலும், அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்துள்ளதாக, கோட்டபாய ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணம், போலியானதென தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற நிலையிலேயே, கோட்டபாய ராஜபக்ஸவை, இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் பிரதிவாதிகளாக, குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர், வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!