கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், பயங்கரவாதி மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டனர் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத் ஜமாத்தின் தமிழ்நாட்டுத் தலைவரான பி.ஜே.சேனுலாப்தீன் என்பவரை, தொடர்ந்தும் இலங்கைக்குள் அனுமதிக்காமலிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் அவர் இலங்கைக்கு வந்திருந்ததாகவும், அவரை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று சாட்சியமளித்தார்.
‘அளுத்கம சம்பவம் இடம்பெற்ற போது, அமைச்சர் ராஜிதவுக்கு தெரியப்படுத்தியதோடு அளுத்கம பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகத்திடம் முறையிட்டிருந்தோம்.
இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அளுத்கமவில் இடம்பெற்றால் நிச்சயமாக தீ மூட்டுவார்கள். அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ச – கோட்டாபய ராஜபக்ச – பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பொறுப்புகூற வேண்டும் என்பதை முறைப்பாட்டில் கூறியிருந்தேன்.
அதனால் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் கோரியிருந்தேன், பின்னரே சம்பவம் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, யார் இதனை செய்தார்கள் என்பதை புதிய அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாக கூறிய போதிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுவே ஆரம்பம். எங்கே சென்று தாக்கினாலும் யாரும் கேட்பதற்கு இல்லை, பொலிஸாரும் இல்லை என்று புரிந்து கொண்டனர். இந்த தாக்குதல்களில் தூள் வகை ஒன்றை கொண்டுவந்து எறிந்து தீ வைத்தார்கள் என்றுதான் கூறியுள்ளனர், இதுவே அளுத்கமவில் இடம்பெற்றது.
ஏன் இதனை ஆராயமுடியவில்லை என்ற கேள்வி உள்ளது.
பின்னர் திகனவுக்கு வந்து காலிக்குச் சென்று மினுவங்கொடைக்கு சென்றது’.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதிகளில், தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே, தாம் உதவிகளை வழங்குவதாக, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹாரான் பகிரங்கமாக அறிவித்திருந்தாக, அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அளவிற்கு மொஹமட் சஹாரானிற்கு அதிகாரங்கள் எங்கிருந்து கிடைத்தன என, பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அசாத் சாலியிடம் வினவினர்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், மொஹமட் சஹாரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்ததாக, அசாத் சாலி குறிப்பிட்டார்.
தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே தேர்தல் காலப்பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாக, அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
மொஹமட் சஹாரான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்ட அசாத் சாலி, அதனால் சஹாரானின் பேச்சுக்களுக்கு அந்த பகுதி மக்கள் செவிமடுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனாலேயே, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மொஹமட் சஹ்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் காணப்படும் விடயங்கள் என்னவென, இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
தமது தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டதாகவும், அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில், சஹ்ரானுக்கும், அவரது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எதிராக, முஸ்லீம் மக்களே முறைப்பாடுகளை செய்தும், அவற்றை கவனத்தில் எடுக்காத பொலிஸார், தீவிரவாதி சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் நண்பர்களாகவே இணைந்து செயற்பட்டிருந்ததாகவும், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
‘ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர், எனது பாதுகாப்பு பிரிவு எனக்கு எச்சரிக்கை கடிதத்தை காண்பித்த போது, இவர் குறித்து நாம் தெரியப்படுத்தினோம்தானே, கடந்த வாரமும் சந்தித்து கூறினோமே என்றேன்.
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம் கூறிய போது, அவர் சம்பவத்திற்கு முதல்வாரம் அதிகாரிகளை அழைத்து பேசினார், அதில் சிசிர மெண்டிஸ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது, அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிலந்தவிடம் ஐந்து வருடங்களுக்கு முன்னரே இதுபற்றி புகைப்படங்களுடன் தெரிவித்திருந்தேன்.
அதனைவிடவும் 2017ஆம் ஆண்டில், கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார்.
அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் விசாரிக்கவில்லை, மக்கள் வீதியில் இறங்கி சஹ்ரானை கைது செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள், அவரைக் கைது செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு முதல் பொலிஸாரும் தவ்ஹீத் ஜமாத்தும் இணைந்தே செயற்பட்டுள்ளனர்.
முஸ்லிம் இனத்தவர் ஒருவர் அவர்களுக்கு எதிராக பொலிஸாரிடத்தில் முறையிடச் சென்றால் காத்தான்குடி பொலிஸார் அவரை துரத்தினார்கள்.
சஹ்ரானை சுதந்திரமாக நடமாட அனுமதித்தனர்.
இன்னுமோர் உதாரணத்தைக் கூறுகிறேன்.
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதியுடன் நான் அண்மையில் சென்ற போது எனது பின்னே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இருந்தார்.
சிலோன் தவ்ஹீத் ஜமாத்திடமிருந்து பிரிந்து சென்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர், பாரம்பரிய முஸ்லிம்கள் வாழ்கின்ற மல்வானையில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி போதனைகளை செய்கிறார்கள் என்றும், அங்கு பிரச்சினை ஏற்படலாம் எனவும் அவருக்கு எச்சரித்தேன்.
அவர் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தொலைபேசி ஊடாக கேட்ட போது, ஜும்மா தொழுகைகளை அவர்கள் செய்கிறார்கள் என்றும் அதனை தடுக்க முடியாது எனவும் பதிலளித்தார்.
ஜும்மா போதனைகளை 40 பேருக்கு கீழே இருந்தால் செய்ய முடியாது என்பது சட்டம்.
என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.