கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி அவசியம் : சாகல!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக அபிவிருத்திச் செய்யாவிடின், இலங்கைக்கு கிடைக்கும் சமுத்திரவியல் நன்மைகள், அருகில் உள்ள வேறு நாடுகளை சென்றடையும் என, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, சர்வதேச சமுத்திரவியல் தினத்தை முன்னிட்டு, துறைமுகங்கள் மற்றும் கப்பற் சேவை தொடர்பில், பாடசாலை மாணவர்களை தெளிவூட்டும் நிகழ்வு, மஹாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பங்கேற்றார்.

நிகழ்வில், இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் அத்துல ஹேவாவித்தாரன, வணிக கப்பற் செயலக பணிப்பாளர் நாயகம் அஜித் பி செனவிரத்ன, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் நிர்வாகம் மற்றும் நிதிப்பிரிவின் மேலதிகச் செயலாளர் திருமதி எஸ்.ஹேரத் உள்ளிட்ட துறைமுக அதிகார சபை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்னாயக்க, கப்பற் செயற்பாடுகள் மூலம் அதிகளவான நன்மைகளை பெற்றுக்கொள்ள, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

‘1980களில் நாம் கொள்கலன்கள் செயற்பாட்டை ஆரம்பித்தோம்.
பூகோள ரீதியில் நம் நாட்டின் அமைவிடம் இச் செயற்பாட்டிற்கு மாபெரும் ஊந்துக்கோளாக அமைந்தது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31ம் நாள் அளவில் 7 மில்லியன் அதாவது ரூபா 70 இலட்சம் வருமானத்தை ஈட்டிக்கொண்டோம்.
இது மாபெரும் சாதனையாகும்.

இச்சாதனையுடன் கொள்கலன்கள் செயற்பாட்டை முன்னெடுக்கும் நாடுகளில் நாம் 22ம் நிலைக்கு உயர்ந்ததுடன், இலகுவில் தொடர்பு கொள்ளல்களை மேற்கொள்ளும் துறைமுகம் என்றவகையில் 11ம் நிலைக்கும் உயர்ந்துள்ளோம்.

இவ்விரண்டு காரணிகளையும் இணைத்து 7 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு சாதனையை புரிந்த போதிலும், அவற்றுள் சிறுதொகை கொள்கலன்கலே உள்நாட்டு தேவையின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றது.

இது வெறுமனே 19 மூவீதமாகும்.
81 வீதமான கொள்கலன்கள் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் மற்றுமொரு கப்பலுக்கு மீள் ஏற்றப்படுகின்றது.
நாம் ஏன் இவ்வாறானதோர் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

ஒரு நாட்டில் இருந்து அல்லது உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இவ்வனைத்து கொள்கலன்களையும் ஒரு கப்பலில் ஏற்றி, இன்னுமொரு நாட்டிற்கு அல்லது மறு முனைக்கு அனுப்பி, அதில் கொண்டுவரப்படும் பொருட்களை எம் நாட்டிலிருந்து எல்லா இடங்களு;கும் பகிர்ந்தளிக்கின்றோம்.

எம் நாட்டின் அமைவிடம் காரணமாகவே இப்பகிர்ந்தளித்தல் செயற்பாட்டை எம்மால் முன்னெடுக்க முடிகின்றது. அமைவிடத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்பட்டால், எம்மால் வெற்றியடைய இயலாது.

ஏனெனில் இந்தியா, சிங்கப்பூர் என எம்மைச் சுற்றி சமுத்திரத்துடன் தொடர்புடைய நாடுகளும், இச்செயற்பாட்டில் ஈடுப்படுவதற்கு எத்தனிக்கின்றன.
கடின உழைப்பின் ஊடாக இச்சேவையில் நாம் மேலும் முன்னேற்றமடைவதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

காலத்தின் தேவைக்கெற்ப கொள்கல்கள் கையாளல் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். தற்சமயம் நாம் இவ்வெல்லையை அடைந்துள்ளோம்.
இன்னுமொரு ஆழமான முனையத்தை நாம் அமைக்கவில்லையாயின், எம்முடைய இச்செயற்பாட்டை பறித்தெடுக்க இந்தியா போன்ற நாடுகள் ஆர்வமாக உள்ளன.

மறுபுறம் நாம் வினைத்திறனான முறையில் செயற்பட வேண்டும். அதாவது புதிய தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும். எம்முடைய ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். புதிய முறைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நல்லதொரு சேவையை வழங்க வேண்டும். வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் எமகக்கான வியாபாரத்தை பெற்றுக்கொள்ள இயலாது.

நாம் சென்று உரையாடல்களை முன்னெடுப்பதன் ஊடாகவே, எமக்கான வியாபாரத்தை பெற்றுக்கொள்ள இயலும். இவ்வுரையடல்களின் பொழுது நாம் மிக விரைவாக இச்செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

எம்முடைய துறைமுகத்தில் வினைத்திறனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. எம்மிடம் திறமையான ஊழியர்கள் உள்ளார்கள். இவ்வூழியர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட மாட்டார்கள்.

எம் நாட்டில் சிறந்த பாதுகாப்பு நிலை காணப்படுகின்றது. கடலைச் சூழ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என எம்மால் கூறகூடியதாக இருக்க வேண்டும்.
அதனை செயற்பாட்டிலும் நிரூபித்து காட்ட வேண்டும்.

அப்பொழுது தான் 7 மில்லியன்களை 8 மில்லியன்களாகவும், 9 மில்லியன்களாகவும் உயர்த்திக் கொள்ள இயலும். 2025ம் ஆண்டளவில் 7 மில்லியன்களை 16 மில்லியன்கள் வரையில் அதிகரிப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

நாம் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தற்பொழுது தாமதமடைந்துள்ள கிழக்கு முனைய நிர்மாணப்பணிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்பொழுது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மிக விரைவாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வனைத்து முடிவுகளும் வெளிப்படை தன்மை வாய்ந்தவை. நாம் சரியான வேலைத்திட்டத்தையே முன்னெடுத்துள்ளோம். இந்நிறுவனத்தின், இந்நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையிலேயே இவ்வனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இது உங்களின் வளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு செயற்பாட்டின் பொழுதும் இதனை அபிவிருத்திச் செய்ய, பாதுகாக்க வேண்டும்.
அதற்கான பொறுப்பு உங்களைச் சாரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்’ என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!