நீராவியடி சம்பவம் குறித்து பொது நலவாய தலைவர்களிடம் செல்வம் அடைக்கலநாதன் எடுத்துரைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் நடந்தேறிய நீதிக்கு புறம்பான செயற்பாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உகண்டாவில் இடம்பெற்றுவரும் பொது நலவாய கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர்களிடம் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நீராவியடி பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயற்பாடு, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறியுள்ளமை தொடர்பில் பொதுநலவாய கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அனைத்து பிரதிநிதிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இம்முறை உகண்டா நாட்டிலே நடைபெறுவதாகவும், குறித்த கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக தான் தலைமை தாங்கி வந்ததாகவும் கூறினார்.

குறித்த கூட்டத்தொடரில் பல்வேறு நாட்டு சபாநாயகர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத் தொடரிலே பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகளிடம், தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவறானஅடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக அவர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினைகள் மற்றும் தற்போது நீராவியடி பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி இருக்கின்றமை என்பதை மிகத்தெளிவாக ஒவ்வொரு தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடம் தான் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!