ஊடகவியலாளர் தவசீலனிடம் விசாரணை!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம், கொழும்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், 3 மணி நேரத்திற்கு மேல், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணை ஒன்றுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு – பனிக்கன்குளம் – மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு, நேரடியாக சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, கடந்த 18 ஆம் திகதி அழைப்புக் கடிதம் கையளித்தனர்.

இந்த கடிதத்திற்கு அமைவாக, நேற்று காலை 10.00 மணிக்கு, கொழும்பு ஒன்றில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தலைமை அலுவலகத்திற்கு, ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், தனது சட்டத்தரணியுடன் சமூகமளித்திருந்தார்.

இதன் போது, முள்ளிவாய்க்கால் கடற்கரையில், கப்பலடி பகுதியில், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற, தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு தொடர்பில் வினவப்பட்டுள்ளது.

களத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவர் என்ற ரீதியில், இந்த நிகழ்வு தொடர்பாக வினவிய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், நிகழ்வில் சிங்கள மொழியில், எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து தொடர்பாகவும் வினவியுள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்கள அதிகாரிகள் இருவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக, ஊடகவியலாளர் தவசீலன் குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!