ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்-செயற்குழு அனுமதி

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்க
ஐ.தே.கவின் செயற்குழு ஒப்புதல்!

நாட்டில் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி கட்சி ஆதரவாளர்கள் பெரும் ஆரவாரம்….
பல அரசியல் பிரமுகர்களும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிவு…….

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு இன்று (26) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (26) மாலை 3 மணிக்கு சிறிகொத்தவில் கூடியது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர். இதனால் வாக்கெடுப்பு எதுவுமின்றி சஜித்துக்கு ஏகமனதாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மத்திய செயற்குழு கூடுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போது சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டதுடன், மத்திய செயற்குழுவில் அங்கீகாரம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.இதற்கமையவே செயற்குழு கூடி இறுதி முடிவு எடுத்தது.

மத்திய செயற்குழு முடிவை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் மாநாடு இவ்வாரம் கூடவுள்ளது.

சஜித் ஜனாதிபதி வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். சஜித்துக்கு பல அரசியல் பிரமுகர்களும் டுவிட்டரில் வாழ்த்துகூறி வருகின்றனர்.

.(சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!