யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இனந்தெரியாத இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சங்கிலி அறுப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், நடந்துசென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துள்ளனர்.
சங்கிலி துண்டுகளான நிலையில், சங்கிலியில் இருந்த பென்டன் கழன்று விழுந்து விட்டதாகவும், துண்டுகளாக அறுந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வழிப்பறிகள் மற்றும் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் புங்கன்குளம் பகுதியில் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. கச்சேரி நல்லூர் வீதி வழியாக புங்கன்குளம் வில்வெந்தெரு வீதி மற்றும் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மர நிழல், மற்றும் வில்வெந்தெரு பகுதியில் இளைஞர்கள் கூடி நிற்பதுடன், அந்தப் பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் முத அருந்தும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவற்றினையும் முன்னெடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பட்டப்பகலில் வீதிகளில் நின்று மது அருந்துபவர்கள் மற்றும், போதைப் பொருள் பாவணையாளர்களினால், அந்தப்பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.
வழிப்பறி மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்பகுதிகளில் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.