அம்பாறையில் தலையின்றி மீட்கப்பட்ட சடலம்-சந்தேகநபர் கைது

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடுகள் மேய்க்கச் சென்ற 65 வயது முதியவர் கடந்த 24ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பம் தொடர்பில் சந்தேகநபர் ஓருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக் கொலை தொடர்பாக அம்பாறை தடயாய்வு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளார்.

திருக்கோவில் நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட குறிந்த நபர் கடந்த 24 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் வீட்டில் இருந்து ஆடுகளை மேய்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளதுடன், மதிய உணவுக்கு வரமுடியாது மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு வருவதாக அவரது மனைவியிடம் தெரிவித்து சென்றநிலையில் குறித்த நபர் தலையின்றி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் வைத்து சிறிய கட்டையினால் தாக்கப்பட்டு கத்தியினால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் தலை உடலில் இருந்து அகற்றப்பட்டு தலையின்றி உடல் மாத்திரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

முதியவரின் சடலத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் கத்தியும், தண்ணீர் போத்தலும் ஒரு துவிச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருக்கோவில் பொலிசார் தலையையும் குற்றவாளிகளையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட முதியவர் தாண்டியடிநேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து முனிசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  இராணுவ முகாமில் சமையல் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர் கொலை செய்யப்பட்டு அவருடைய தலை காணாமல் போயுள்ளதுடன், இரத்தம் எடுத்த நிலையில் ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமையானது பிரதேச மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!