மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும்.
இந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.
இதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் மு.தருமரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் விஜி திருக்குமரன் கலந்து கொண்டு தலசீமியா நோய்தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஒரு பரம்பரையியல் நோயாகும். இரத்தத்தில் காணப்படும் செங்குருதிச் சிறு துணிக்கையில் உள்ள ஹிமோகுளோபின்கள் உரிய காலத்திற்கு முன்னர் அழிவடைவதால் இரத்தத்தில் ஒட்சிசன் காவும் திறன் குறைவடைகின்றது.
இதனால் சாதாரண உடலியல் தொழிற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதினால் இந்நோயின் அறிகுறிகள் உடலில் தென்படுகிறது.
தலசீமியா நோயில் அல்பா, பீற்றா என இருவகை உள்ளன. பொதுவாக இந்நோயுள்ள பிள்ளைகள் பிறந்து ஆறு மாதங்களின் பின்பே இந்நோய் அறிகுறிகள் தென்படும். குருதியில் காணப்படும் ஹிமோகுளோபின் அளவு குறைவடைவதால் ஏற்படும் விளைவுகளே நோயின் அறிகுறிகளுக்கான காரணமாகும்.
கண், நாக்கு, வெளிறிப்போதல், களைப்பு, மூச்சுவாங்குதல், சோர்வுத்தன்மை, உணவில் பிரியமின்மை போன்றவையும் தலசீமியா நோயின் அறிகுறிகளாகும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் விஜி திருக்குமரன் தெரிவித்தார். (மா)