வவுனியாவில், பாடசாலை ஒன்றிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவரை கைது செய்யக் கோரிஆர்ப்பாட்டம்!

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு, அபகீர்த்தியை ஏற்படுத்திய நபரை கைது செய்யக் கோரி, பெற்றோர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில், தரம் 3 இல் கல்வி பயிலும் தனது மகள், பாலியல் துர்நடத்தைக்குள்ளதானதாக தெரிவித்து, குறித்த மாணவியின் தந்தையால், சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தையால் இருவர் தாக்கப்பட்டதுடன், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டமைக்கு அமைவாக, இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

குறித்த தந்தையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், மாணவியின் தந்தையார் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே, இவ்வாறான பொய் பரப்புரையை மேற்கொண்டதாக தெரிவித்து, நெடுங்கேணி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு, நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றதுடன், பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, வர்த்தக நிலைய உரிமையாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!