அம்பாறை, கோமாரியில் வைத்தியசாலையை தரமுயர்த்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்ட, பொத்துவில் கோமாரி மத்திய மருந்தகத்தினையும் மகப்பேற்று வைத்தியசாலையையும் தரம் உயர்த்தி, பூரணமான வைத்திய சேவையை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கோமாரி பொது மக்கள் மேற்கொண்டனர்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது, கோமாரி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கந்தசாமி ஜெயக்காந்தன் தலைமையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டதுடன், சுகாதார இராஜாங்க அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமைக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையானது சுனாமி அனர்த்தத்தை அடுத்து நிர்மாணிக்கப்பட்டு இருந்த போதும், அன்று முதல் இன்று வரை எந்தவிதமான நவீன மருத்துவ ரீதியான வசதிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், கோமாரி வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரு வைத்தியர்களில், ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய இரண்டு மருத்துவ மாதுக்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மகப்பேற்று பிரிவு பேன்றவற்றுக்கான போதிய அடிப்படை வசதிகளும் இல்லாது காணப்படுவதுடன், இரத்தப் பரிசோதனை செய்யும் உபகரணமும் வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான தருமராசா சுபோகரன், எம்.துரைரெட்டணம் மற்றும் கோமாரி, மணல்சேனை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் எனப்பலரும் ஊடகங்களுக்கு கருத்துக்கள் வழங்கியதை அடுத்து, மக்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!