ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் மோசமான நிலைக்கு செல்லும் – மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளர் சந்தர்ப்பத்திற்காக, மோதலில் ஈடுபட்டு வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஆட்சிக்கு வந்தால், நாடு மீண்டும் மோதல் களமாகிவிடும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கான மாநாட்டை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று காலை கொழும்பிலுள்ள கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விடவும், அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களை மேற்கொள்வதற்கே கங்கணம்கட்டி அலைந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு எமது வேட்பாளரை நாங்கள் எப்போதோ அறிவித்துவிட்டோம். ஆனால் அவர்கள் இன்று அறிவிப்போம் நாளை அறிவிப்போம் என்கிறார்கள்.

நேற்று இரவு தெரிவு செய்து விட்டோம் என்று ஒரு சிலரும், இல்லை இல்லை அவரில்லை என்று இன்னும் சிலரும் கூறி வருகின்றனர்.

எப்படியிருப்பினும் இவர்கள் மத்தியில் மோதல்கள் இருக்கின்றன. அரசியலமைப்பிற்கு அமைய இரண்டு விதமான ஆட்சி அதிகாரங்கள் இருக்கின்றன.
ஒன்று பிரதமரின் ஆட்சி. இரண்டாவது ஜனாதிபதியின் ஆட்சி.

இருவரும் மோதிக்கொண்டு ஜனாதிபதி ஒருபுறமாகவும், பிரதமர் இன்னுமொரு புறமாகவும் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இருவரும் பிரிந்து நின்றால், நாட்டிற்கு பணி செய்ய முடியுமா? இல்லை.

வீட்டில் கணவனும், மனைவியும் இரண்டு புறமாக இழுத்துக் கொண்டிருந்தால், வீடு உருப்படுமா? இல்லை. அதேபோலதான் இது. இப்போது என்ன நடந்துள்ளது?

ஜனாதிபதியும், பிரதமரும் இருபுறத்திலும் இழுத்துக் கொண்டிருப்பதால், நாடு அதளபாதாளத்திற்கு செல்வது மட்டுமன்றி, இன்று மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாவதற்கு, பிரதமராவதற்கு முன்னரே, போட்டியிடுவதற்காக இருவரும் சண்டை செய்து வருகின்ற நிலையில், ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்?
இதனை விடவும் உக்கிரமடைந்து விடும் இவர்களுடைய சண்டை. இருவரும் இரண்டு பக்கமாக இருந்துக் கொண்டிருந்தால் இறுதியில் நாங்களே அடிவாங்க வேண்டும்.

சஜித்தும், ரணிலும் மோதிக் கொள்வது புதிய விடயமல்ல. முழு நாடும் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் இந்த மோதல் இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் என சஜித் பிரேமதாஸவும, ரணில் விக்ரமசிங்கவும், ஆட்சிக்கு வர முடியுமா என்கிற நிர்ப்பந்தமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதனையே சிந்திக்க வேண்டும். எம்மிடையே அப்படி பிரச்சினையில்லை. வந்தால் இருவரும் இணைந்து முடிவு செய்வோம். இந்த அரசின் ஆட்சியில், இலங்கை மத்திய வங்கி மோசடி இடம்பெற்று பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

இதனை விடவும் மேலும் பல மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். எனினும் எப்படியாவது எமது வேட்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவே முயற்சிக்கின்றனர். என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச, 2015 ஆம் ஆண்டு வரை நடைமுறை செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகள், இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலிருந்து முடங்கிவிட்டதாக, கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மீண்டும் ஒருமுறை கைவிட்ட இடத்திலிருந்து, அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கான மாநாட்டை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று காலை கொழும்பிலுள்ள கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது.

இதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!