நீராவியடி தேரர் தகனம்:யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கண்டனம்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் விகாரை அமைத்து தங்கியிருந்து கொழும்பில் இறந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை, நீராவியடி செம்மலைப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்தமைக்கு, யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்னறை வெளியிட்டுள்ள யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம்,
பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றிருப்பதானது மிகுந்த வேதனையையும், இலங்கையின் நீதித்துறையின் மீது அச்சத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்பட்ட இந் நடவடிக்கைகளுக்கு அரசும், நீதித்துறையும் என்ன செய்யப்போகின்றது? இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரமா நீதித்துறையும் – நீதி மன்றங்களும் – தீர்ப்புக்களும்? இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றதா? பேரினவாதத்தை அரசு தொடர்ந்தும் கண்மூடித்தனமாக பார்த்துக் கொண்டிருக்கப்போகின்றதா? என்ற வினா சிறுபான்மை மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகின்றா? அண்மையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் நல் உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக தமிழ் பேசும் மக்களை குறிவைத்து பல இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் பேசும் மக்கள் தமக்குள் உள்ள பிரச்சினைகளை ஆரோக்கியமாக பேசித்தீர்த்துக் கொண்டு பேரினவாதத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு இலங்கையில் சுயத்துடன், சம அந்தஸ்தை பெற்று, எம்மை நாம் ஆளக்கூடிய அரசியல் தீர்வொன்றை பெற்று கௌரவமாக வாழவும் செம்மலை பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற அநீதி போன்று இனி ஒருபோதும் நடக்காத வண்ணம் சிறுபான்மையினரின் பாரம்பரிய அடையாளங்கள், வழிபாட்டுத்தலங்கள், நிலங்கள் மற்றும் இருப்புக்களை பாதுகாக்கவும் திடசங்கற்பம் பூணுவோம். என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!