திருமலை, குச்சவெளியில் இராணுவத்தின் நீர்க்காகப் பயிற்சி நிறைவு!

இலங்கை உட்பட உலக நாடுகளின் படைகள் மற்றும் விசேட படையினர் கலந்துகொண்ட நீர்க்காக கூட்டுப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு திருகோணமலை குச்சவெளியில் நேற்று மாலை இடம்பெற்றது.

நீர்க்காக இறுதி தாக்குதல் பயிற்சியில் இலங்கை உட்பட 26 நாடுகளை சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான முப்படை வீரர்கள் பங்குபற்றினர்.
இப்பயிற்சி முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 266 முப்படை அதிகாரிகளும் 2610 வீரர்களும், உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 34 அதிகாரிகளும் ஐம்பது வீரர்களும் பங்கேற்றனர்.

பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், திறமைகளை வழிகாட்டுதல் சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்குதல் போன்ற இலக்குகளை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்துவரும் பத்தாவது கூட்டுப்பயிற்சி இதுவாகும்.

கடந்த மூன்றாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டு பயிற்சியில் மேல், தென் மாகாணம், மத்திய, வடமத்திய மாகாணங்களில் கடந்த இருபது நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இக்கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதலே குச்சவெளி-கும்புறுப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நிறைவுற்றது.

இப்பயிற்சியில் பாதுகாப்பு பிரதம அதிகாரி ரியல் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகவும், பாகிஸ்தான் இராணுவத்தின் விசேட சேவைகள் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உசைன் மும்தாஸ் விசேட அதிதியாகவும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியந்த சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் உட்பட முப்படைகளின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!