பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக, முல்லைத்தீவு நீராவியடியில் மாபெரும் கண்டனப் பேரணி!

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னரே, பௌத்த மதகுருவின் சடலம் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

நேற்று முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தை பொலிசார் வேடிக்கை பார்த்ததாகவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சட்டத்தரணி ஆலய பூசகர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமை என்பவற்றை கண்டித்து இன்று வடக்கு கிழக்கு பகுதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய முல்லைத்தீவு நகரில் வடக்கு கிழக்கின் சட்டத்தரணிகள் பலரும், தமிழ் மக்கள் பலரும் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
காலை 11 மணியளவில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்த கண்டனப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு சென்றடைந்து அங்கு கோசமெழுப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

இதன்போது, கறுப்பு துணிகளால் வாய்களை கட்டியவாறும், கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

சட்டம் மீறப்பட்டுள்ளமை, தமிழர்கள் மீதான அடக்கு முறை, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக வலியுத்தல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கிய பதாகைகளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை கண்டனப் பேரணி சென்றடைந்தது.

பேரணி மாவட்ட செயலகத்தை அண்மித்ததும், மாவட்ட செயலக வாயில்கள் மூடப்பட்டு, மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் வட, கிழக்கின் சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், முல்லைத்தீவு நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, இக்கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!