மன்னார் சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பு!

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களைக் கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி பா.டெனீஸ்வரன், குறித்த சம்பவங்கள் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்து ஆலய வளாகத்திற்குள் அல்லது அதற்கு அருகாமையிலோ இவ்வாறான மனித உடல்கள் எரிக்கப்படுவதோ அல்லது புதைக்கப்படுவதோ இல்லை.

ஆனால் நீதிமன்ற கட்டளையையும் மீறி புத்த பிக்குவின் உடல் தீத்தக்கேணிக்கு அருகாமையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் தென்பகுதியில் இருக்கின்ற சிங்கள மக்களும் இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் புத்த மத குருமாரின் உடல்களையோ அல்லது சிங்கள மக்களின் உடல்களையோ அடக்கம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர்.

ஆனால் இந்து ஆலயத்திற்கு அருகாமையில் அல்லது தீத்தக்கேணியில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டமையினை கண்டித்தே எமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

சட்டத்தரணிகளையும், பொது மக்களையும் தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

நீதிமன்றம் வழங்கிய கட்டளை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு, அருகாமையில் இருந்த பொலிஸாருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

எனவே தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும். உரிய நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை மன்னார் சட்டத்தரணிகள் முல்லைத்தீவிற்குச் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டனர்.

மன்னார் நீதிமன்றில் இன்றையதினம் வழக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, இடம்பெறவிருந்த வழக்கு விசாரனைகள் பிறிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!