வடக்கில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில், சட்டத்தரணி ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணிமீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று வடமாகாணம் தழுவிய சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு நீராவிடிய பிள்ளையார் ஆலய வளாகத்தில், சட்டவிரோதமாக விகாரை நிர்மாணித்து அதனைப் பரிபாலித்து வந்ததாகக் கூறப்படும் கொலம்பே மேதாலங்கார தேரர் கடந்த 21ஆம் திகதி புற்றுநோய் தாக்கத்தினால் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, தேரர்கள் வாழ்ந்த பகுதியிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்படும் சிங்கள மக்களின் மரபைப் பின்பற்றி, உயிரிழந்த தேரரை அப்பகுதியில் அடக்கம் செய்ய நீராவியடி விகாரையின் விகாராதிபதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தேரரை அடக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்து, ஆலய நிர்வாக சபையினரால் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும்வரை தேரரின் உடலை அடக்கம் செய்வதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நேற்றையதினம் இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, தேரரின் உடலை ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், முல்லைத்தீவு இராணுவ முகாம் அருகே உள்ள கடற்கரையில் தேரரின் உடலைத் தகனம் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் தேரர் தரப்பினருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே, பெரும்பான்மை இனத்தவர்களால் அவசர அவசரமாக தேரரின் சடலம், நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்திற்கு அருகில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பகுதியில் குழுமியிருந்த பிரதேச மக்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது, சட்டத்தரணி சுகாஸ்மீது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், சம்பவத்தின்போது, அருகிலிருந்த தமிழ் இளைஞர்கள் சிலர்மீதும் அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதனையடுத்து நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து, வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினர் குறித்த சம்பவத்தைக் கண்டித்து இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.

இதனபோது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்காத வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இதனால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றிற்குச் சென்றிருந்த பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!