மட்டு மாநகர சபையில், சேவை வழங்கும் மையம் திறந்து வைப்பு!

நவீன தொழில்நுட்ப முறையில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகளுக்கு சேவைகள் வழங்கும் மையம், இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன், ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட, மாநகர சபையின் பிரஜைகள் சேவை மையம், ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபாகுமார் தம்பி மற்றும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோரல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் மக்களுக்கான சேவைகளை துரிதமாகவும், தங்குதடையற்ற முறையிலும் வழங்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் ஊடாக, பொது மக்கள் ஒரே இடத்தில் மாநகர சபையின் அனைத்து விதமான சேவைகளையும் துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாநகர சபைக்கு வருகை தராது நேரடியாக வீட்டிலிருந்தவாறே இணையத்தளத்தின் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்வதோடு, கட்டணங்களையும் செலுத்தக் கூடியதாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் போது, மாநகர நிர்வாக துறையில் 2018 ஆம் ஆண்டு வருமான வரி அறவீட்டு நடவடிக்கையில் தமது பங்களிப்பை வழங்கிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து மாநகர செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி வரும் ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், கிராமிய அபிவிருத்தித் திணைக்கள மாகாண பணிப்பாளர் நா.தனஞ்செயன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!