பாரதப்பிரதமர் சாதகமான ஒரு சமிஞ்ஜையை வெளிப்படுத்தி சென்றுள்ளார்.

ஆலயங்களின் அளவற்ற கட்டுமானப்பணிகளுக்கான செலவை குறைத்து அதனை பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

அதன் மூலம் ஒரு சிறந்த கல்வி சமூகத்தை கட்டியெழுப்புங்கள் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கண்ணகிகிராமத்தின் கண்ணகி வித்தியாலயத்தில் நேற்று  இடம்பெற்ற சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் .

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவித்தார்
ஆலயங்களுக்காக நிதி கேட்பதை விட பாடசாலைகளுக்காக நிதி கேட்கும் போது நான் உண்மையாக உளமார மகிழ்வடைகின்றேன். அதுபோல் பிள்ளைகளின்  கல்விக்காக பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். அதன் |மூலம் உங்களையும் அவர்கள் அரவணைப்பார்கள். ஆகவே உங்களது பிள்ளைகள் உங்களைப்போல் கஸ்டப்படுவதை அனுமதிக்காதீர்கள் என்றார்.

இன்று பாரதப்பிரதமர் மோடியை பாருங்கள். அவர் திறன்மிக்க சக்திமிக்க ஆளுமைமிக்க ஒரு தலைவராக இருக்கின்றார். நேற்று இலங்கை வந்த அவர் அனைத்து கட்சிகளோடும் பேசினார். இந்திய நாட்டின் பிராந்தியத்தினுள் காணப்படும் நாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தனது ஆளுமைக்குள் இந்நாடுகள் இருக்க வேண்டும் எனவும் செயற்பட்டு வருகின்றார்.

அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போடும் பேசினார். ஏனைய பெரும்பான்மை கட்சிகளோடும் பேசினார். பெரும்பான்மை கட்சிகள் தமது பெரும்பான்மை மக்கள் பற்றி அவரோடு பேசியபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரம் சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பிலும் கிடைக்க வேண்டிய தீர்வு திட்டங்கள் தொடர்பிலும் பேசினர். இதற்கு அவர் சாதகமான பதிலையும் சமிஞ்ஜையும் வெளிப்படுத்தி சென்றுள்ளார்.

மேலும் எம்மை இந்தியாவிற்கு அழைத்து விரிவாக பேசுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரம்தான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

பாடசாலையின் அதிபர் எம்.இராசநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர். மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிவஸ்ரீ த.குகனேசசர்மா அவர்கள் நடாத்தி வைத்த சமய வழிபாடுகளின் பின்னர் பாடசாலை சுற்றுமதிலுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேந்திரன் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் க.கோகுலன் உள்ளிட்ட பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை சுற்றுமதிலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் 10 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.( சே)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!