ஐ.தே.க வேட்பாளரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்ய தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நேற்று இரவு அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், குறித்த மூவரும் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். எனினும் இதன்போதும் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!