தேரரின் உடலை தகனம் செய்வது குறித்த இறுதித் தீர்மானம் இன்று!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள விகாரையின் பௌத்த மதகுரு மேதலங்கார கீர்த்தி தேரரின் உடலை தகனம் செய்வது குறித்த இறுதி தீர்மானத்தை, முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று பிறப்பிக்கவுள்ளது.

அதற்கமைய சம்பந்தப்பட்ட தரப்பினரும், தற்போது விகாரையில் விகாராதிபதியாக உள்ள தேரரும் இன்று காலை மன்றில் முன்னிலையாக வேண்டும் என முல்லைத்தீவு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவரின் பூதவுடலை குறித்த பகுதியில் புதைக்கவோ அல்லது எரிக்கவோ கூடாது என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பௌத்த தேரரின் பூதவுடல் பழைய செம்மலை நீராவியடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பௌத்த மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் ஆகியோர் பௌத்த தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் பௌத்த தேரரின் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான தமிழ் மக்களும் ஒன்றுகூடியிருந்தனர். அத்தோடு தேரரின் உடலை அங்கு தகனம் செய்ய வேண்டுமென தேரரருக்கு ஆதரவான சிலர் கூறியமையால் அங்கு சில மணித்தியாலங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியிருந்தது.

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக விகாரை அமைத்திருந்தார். அத்தோடு முல்லலைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு செல்லும் மக்களுடன் முரண்பட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இரு தரப்பும் சமாதான முறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் குறித்த பௌத்த தேரரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!