யாழ், காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை பகுதியில் உள்ள வீட்டு வளவில் கஞ்சா செடிகள் மூன்றினை வளர்த்த நபரொருவர் இன்றையதினம் காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் விஷேட குற்றத்தடுப்பு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் கீரிமலை பகுதியில் உள்ள வீடொன்று, சிவில் உடை தரித்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வீட்டுத் தோட்டத்துக்குள் மறைவாக வளர்த்த மூன்று கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த வீட்டில் கஞ்சாவினை கொள்வனவு செய்ய வந்திருந்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து எட்டு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் குரும்பசிட்டி பகுதியில் கஞ்சா நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய நபர்கள் என காங்கேசந்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் கூறினர்.

அத்துடன் இரு இளைஞர்களிடம் இருந்து தலா 8 கிராம் கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!