மக்கள் பலத்தை வழங்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு : திஷாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு, மக்கள் பலத்தை வழங்கினால் தோட்டதொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

மக்கள் இந்த முறை மக்கள் சக்தியின் இயக்கத்திற்கு பலத்தை வழங்குவார்களாயின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்று கொடுக்கமுடியும்.

இந்த நாட்டை இதுவரை காலமும் ஆட்சிசெய்து வருகின்றவர்கள் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எதனை செய்து கொடுத்துள்ளார்கள்?

ஆனால் ஒவ்வரு முறையும் தேர்தல் வருகின்றபோது இந்த நாட்டில் அமைச்சர்கள் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

பிள்ளைகளின் கல்வி மற்றும் பாடசாலை கட்டிடம் சுகாதாரம் போன்றவைகளை அபிவிருத்தி செய்து தருவதாக கூறுகிறார்கள். ஆனால் இவை எதனையும் செய்து கொடுப்பதில்லை.

அதேபோல் தோட்டப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி வழங்கினார்கள். இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்பினை பெற்று கொடுப்பதாக வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் 72வருடங்கள் கடந்தும் இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்ற முடியாத ஆட்சியாளர்களாக காணப்படுகிறார்கள். நவம்பர் மாதம் 16ம் திகதி மீண்டும் இந்த ஆட்சியாளர்களுக்கு பலத்தை வழங்கப் போகிறீர்களா?

இன்று ஒரு புதிய அரசாங்கத்தை எதிர்பார்த்து மக்கள் கூடியிருக்கிறார்கள். மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கும் அனேகமான பிரச்சினைகள் இருக்கிறன.

தோட்டப்பகுதியில் தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கிறதா? இல்லை. இதுவரை காலமும் இந்த நாட்டில் ஆட்சி செயதவர்கள் வேலைசெய்யும் மக்கள் பக்கம் இருந்தது இல்லை.

தோட்டங்களை நிர்வாகிக்கும் உரிமையாளர்கள் பக்கம் தான் இந்த ஆட்சியாளர்கள் இருகின்றார்கள்.
இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் உள்ளார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தோட்ட உரிமையாளர்கள் பக்கம் இருப்பவர்கள். ரணில் விக்ரமசிங்க என்பவர் தோட்ட உரிமையாளர்.

நவீன் திஸாநாயக்க தோட்ட உரிமையாளர். இவர்கள் தினந்தோறும் தோட்ட உரிமையாளர்கள் பக்கமே இருப்பார்கள்.

இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்த அளவிலான சம்பளம் கிடைக்கிறது. ஆகையால் நாங்கள் மக்களிடம் வாக்குறுதி ஒன்றினை வழங்குகின்றோம். தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதரத்தை அதிகரிக்கும் நோக்கில் சிறந்த முறையிலான வேதனத்தை பெற்று கொடுக்கும் நடவடிக்கையினை எங்கள் மக்கள் சக்தி முன்னெடுக்கும்.

இன்று தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் கோருகிறார்கள். ஆனால் நாங்கள் ஆயிரம் ரூபாய் தோட்டதொழிலாளர்களுக்கு போதாது என்கிறோம்.

ஒரு அரசாங்க திணைக்களத்தில் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாள் சம்பவம் 1275 ரூபாய். ஒரு தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் ஆயிரம் ரூபாய் எதற்கு கேட்கிறார்கள். வாகனங்கள் வாங்குவதற்கோ அல்லது மாளிகை வாங்குவதற்கோ அல்ல. நிம்மதியான உணவை உண்டு வாழ்வதற்கு.

தொண்டமான், திகாம்பரம், ரனில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, லக்ஸ்மன் கிரியல்ல அனைவரும் மக்களின் சொத்தை எதற்காக கொள்ளையடிக்கிறார்கள்.

ஒரு வேளை சாப்பிட வழியில்லாமலா? இல்லை மாளிகைகள் அமைத்து கொள்ளவும், அவர்களுடைய குடும்பங்களையும் பிள்ளைகளையும், சுகபோக வாழ்கை வாழவைப்பதற்கே இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

இன்று மலையகத்தில் பிள்ளைகள் பணம் இருந்தால் மாத்திரமே கல்வி கற்கமுடியும். எனவே நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கல்வியினை மேற்கொள்ள தான் இந்த மக்கள் சக்தியினை ஆரம்பித்துள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் யாராவது போதைபொருள் தயாரிக்கிறார்களா? இல்லை. ஆனால் போதைபொருள் நுவரெலியாவிற்கு எவ்வாறு வருகிறது. கினித்தேன கம்பளை அல்லது கெப்பட்டிபொல ஊடாகத்தான் கொண்டுவர வேண்டும். ஆனால் இலங்கை நாட்டுக்கு போதை பொருள் வரவேண்டுமானால் ஒன்றும் விமானம் ஊடாக வரவேண்டும். இல்லாவிட்டால் கடல்மார்க்கமாக வரவேண்டும்.

ஆகவே இலங்கையிலும் போதைபொருள் தயாரிப்பதில்லை. நுவரெலியாவிலும் தயாரிப்பதில்லை. இந்த வேலைத்திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நாட்டில் சிறந்த பொலிஸ் தினைக்களம் உள்ளது. இந்த நாட்டில் உள்ள பொலிஸார் எவ்வாறான குற்றசெயல்களையும் இனங்கண்டு விசாரணைகளையும் மேற்கொள்வார். ஆனால் பொலிஸாரால் இனங்காண முடியாத குற்றசெயல்கள் இருக்கின்றன.

லசந்தவுடய கொலையை இனங்காண முடியாது. தாஜீதீனுடைய கொலையினை இனங்காண முடியாது. எக்னெலிகொடவின் கடத்தலை இனங்காண முடியாது.

உபாலி தென்னகோனை தாக்கியவர்களை இனங்கான முடியாது. லசந்த விக்ரமசிங்கவை தாக்கியவர்களை இனங்கான முடியாது.

இவை அனைத்தையும் செய்தது அரசாங்கம். இன்று மலையகத்தில் உள்ள இளைஞர் யுதிகளே கொழும்பு பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும். 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, உயிர் இழந்தவர்கள் சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகள்தான். எந்த அமைச்சர்களுடடைய பிள்ளைகளும் உயிர் இழக்கவில்லை. தமிழ் சிங்களம் முஸ்லிம் போன்ற அமைச்சர்களுடைய பிள்ளைகளும் உயிர் இழக்கவில்லை.

இன்று நாட்டில் சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சித்து வருகிறார்கள். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எனக் குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!