நாகர்கோவில் படுகொலைநினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை வான் படையினர் 1995ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் 22ஆம் திகதி நடாத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 24ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன்றலில் நினைவேந்தல் நிகழ்வு, பாடசாலை அதிபர் கு.கண்ணதாஸன் தலைமையில் இடம்பெற்றது.

இன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுச் சுடர் ஏற்றும்போது விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கண்ணீர்விட்டுக் கதறியழுதனர்.

நினைவேந்தல் நிகழ்வில், விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், எஸ்.தியாலலிங்கம், நாகர்கோவில் மாகா வித்தியாலய முன்னாள் அதிபரும்

இமையாணன் பாடசாலையின் அதிபருமான இ.சிவசங்கர், மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!