தேர்தல்கள் ஆணைக்குழு விசேட நடவடிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் தம்மால் குறிப்பிட்ட வாக்கு பதிவு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு நியாயமான அச்சம் இருக்குமாயின், அந்த வாக்காளர் வேறொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை அளிப்பதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப பத்திரம் அனைத்து மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாக்கு பதிவு மத்திய நிலையம் உள்ள பகுதியில் நிலவும் நிலைமையின் அடிப்படையில், வாக்கை பயன்படுத்துவதில் அச்சம் உள்ள வாக்காளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க முடியும் எனவும், இவ்வாறு சமர்பிக்கப்படும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிக்கப்பட்டு கிராம உத்தியோகத்தரினால் அது உறுதி செய்யப்படுவது கட்டாயம் எனவும், கிராம உத்தியோகத்தரினால் உறுதி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடையர்கள் அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால எல்லை எந்த வகையிலும் நீடிக்கப்பட மாட்டாது எனவும், விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை பூரணப்படுத்தி அத்தாட்சிப்படுத்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!