மட்டு, மாநகர முதல்வர் – அவுஸ்ரேலிய தூதுவர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தலைமையிலான தூதுக்குழுவினர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த தூதுக்குழுவினர், மாநகர சபை முதல்வர் தி.சரவணபவனை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் அவுஸ்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியப்பகுதிக்கான உதவி செயலாளர் டாக்டர் லஸியன் ஸரீகம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான செயலாளர் டோம் டேவிஸ் மற்றும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையில் இருப்பது குறித்து மாநகர முதல்வரினால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் அவுஸ்ரேலிய முதலீட்டாளர்களின் வருகையின் அவசியம் குறித்தும் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சில அமைச்சுகள் மூலம் ஒதுக்கப்படும் நிதியொதுக்கீடுகளில், மட்டக்களப்பு மாநகர சபை புறக்கணிக்கப்படுவது குறித்தும், இன வேறுபாடுகள் பார்க்கப்படுவது குறித்தும் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

குண்டு வெடிப்பிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதன் போது அவுஸ்ரேலிய தூதுக்குழுவினர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கும் என, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து உள்வாங்கப்பட்ட, வளர்ச்சிக்கான திறன்கள் திட்டத்தின் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தவும், மாவட்ட செயலகமான போர்த்துகேயர் கட்டடத்தினை ஒரு சுற்றுலா தளமாக மாற்றி அபிவிருத்தி செய்வதனையும், மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்குமான கலந்துரையாடல், மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

அவுஸ்ரேலியா நாட்டின் இலங்கை நாட்டிக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலிவுடன் வருகைதந்த பிரதிநிதிகளுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேட்கொள்ளப்படவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

தொடர்ந்து சுற்றுலாத்துறையின் மாவட்டத்திற்கான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்ரேலியா நாட்டின் இலங்கை நாட்டிக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் அவருடன் வருகை தந்த பிரதிநிதிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!