எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் போர் வெடிக்கும்:ஈரான் எச்சரிக்கை!

சவுதி அரேபிய விவகாரத்தில், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப்பெரிய போராக வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப் பெரிய போராக வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது குறை கூறி வரும் நாடுகள், தாக்குதல் மிரட்டல் விடுத்து வருகின்றன.

அவ்வாறு தங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால் தாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க மாட்டோம்.

அந்தத் தாக்குதல் முழுமையான, மிகப் பெரிய போராக வெடிக்கும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள கச்சா எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த ஆலைகளில் தீப்பிடித்தது.

இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

யேமனில் தங்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.

ஏற்கெனவே, ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபிய எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன.

அதற்கு ஈரான்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சூழலில், சர்வதேச எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக ஈரானுக்கு எதிரான கூட்டணியை அமைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!