யாழ் குடத்தனையில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த ஜீலை மாதம் தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடத்தனை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய திருநாவுக்கரசு சூரியகுமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாதங்களின் பின்னர் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தீ விபத்து சம்பவம் திட்டமிட்ட கொலை முயற்சி என உயிhழந்தவரின் மனைவி மற்றும் அவரது தந்தையார் தெரிவித்திருக்கும் நிலையில், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜீலை மாதம் 27ம் திகதி சக நண்பர்களுடன் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர், நண்பர்களுக்கு உணவு வழங்குமாறு வேண்டி மனைவியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து இரவு உணவு அருந்திவிட்டு குடும்பஸ்தர் வீட்டின் வெளிப்புறத்திலுள்ள விறாந்தையில் நண்பர்களுடன் உறங்கியதாகவும், நள்ளிரவு 12:00 மணிபோல் மனைவி எழுந்து பார்த்தபோது சக நண்பர்கள் சகிதம் சூரியகுமார் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கிணற்றடியில் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக மனைவி தனது கணவனை பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சூரியகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவன் உயிரிழந்தமை கொலை முயற்சி என்றும், இதற்கு சக நண்பர்களே காரணமாக இருக்கலாம் எனவும் மனைவி இறப்பு விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரின் தந்தை, மகனின் உயிரிழப்பு திட்டமிட்ட ஒன்று எனவும், மனைவியும் சக நண்பர்களுமே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் நுளம்புத்திரி இல்லாத நிலையில் நுளம்புத்திரி பற்றியதாலே தீக்காயம் ஏற்பட்டதாக உயிரிழப்பிற்கு முன்னர் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறி இருந்ததுடன், தான் கூறியவாறே கூறுமாறும் மனைவிக்கும் கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!