பிரதமர் மீது ஹக்கீம் குற்றச்சாட்டு!

அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமை இடமளிக்க வேண்டும் என, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அமைச்சரவைக் கூட்டமே இன்று நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்கான காரணம் எமக்கு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பித்தவுடன், நாங்கள் அனைவரும் வியப்படைந்து விட்டோம்.

யாராக இருந்தாலும் இந்த வேளையில் இதனை செய்ய முயற்சித்தால், தோல்வி மனப்பாங்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதனை செய்ய முயற்சிப்பது எம்மை நாமே பலவீனப்படுத்தும் செயல்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் திட்டத்தினை அமைச்சரவைக்கு கொண்டுவந்தவர் பிரதமர் என்பதை நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

உண்மையில் இது எமக்கு மிகுந்த மன வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு நாம் உடன்படவில்லை. இதனை நிறைவேற்றவும் முடியாது.

சரியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் உரிமையினை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த வேளையில் இவ்வாறு செய்ய முற்படுவது நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் செயலாகவே அமையும் என நாம் பார்க்கின்றோம்.

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் கலந்து ஆலோசித்து செய்ய வேண்டியதை அமைச்சரவையை கூட்டி பேச வேண்டியது இல்லை என ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார்.

பெரும்பாலானோர் பிரதமரின் செயலுக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். முடிந்தால் இதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றி பாருங்கள் என்று நாம் சவால் விடுத்தோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் இதனை நாம் தோற்கடிப்போம் என தெரிவித்தோம். ஏனெனில் இது எம்மை பலவீனப்படுத்தும் செயல்.

ஒக்டோபர் 26ம் திகதி நாம் அவருடன் இணைந்து கொண்டது, புதிய ஜனாதிபதியுடன் தனியான அரசாங்கம் ஒன்றினை அமைப்போம் என பிரதமர் கூறியதன் காரணத்தினாலேயே.

நாம் அவர் பக்கம் சென்றிருந்தோம். ஆனால் எம்மை தள்ளிவைத்துவிட்டு எமக்கு தெரியாது இவ்வாறு ஒன்றினை செய்ய முற்படுவது, அவரின் தோல்வியினை காட்டி நிற்கின்றது.

நல்ல திறமையான ஒருவர் வேட்பாளர் ஆவதனை தடுப்பதற்காக செய்யும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைத்திருக்கின்றார்கள்.

அங்கு போய் எதுவும் பேசுவதில் பயன் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நான் எனது எதிர்ப்பினை தெரிவித்து விட்டேன். தற்போது மக்கள் விரும்பும் நபர் சஜித் பிரேமதாச அவர்கள் வேட்பாளராக களமிறங்கினால் மட்டுமே வெற்றியினை அடைய முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் விரும்புவது சஜித் பிரேமதாசவையே. ஆனால் அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இடமளிக்காமை எமக்கு வருத்தம் அளிக்கின்றது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!