தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அதிகாரங்களை இல்லாமல் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை – சஜித்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்ய உரிமை கிடையாது என, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.

விசேட அமைச்சரவை கூட்டம் தொடர்பில் சொல்வதற்கு எனக்கு அவசியம் இல்லாதிருக்கின்றது. ஏனெனில் அமைச்சரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எழுத்து மூலமான எந்தவிடயங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஆயினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில்தான் அங்கு அதிகம் பேசப்பட்டது. அதற்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பெயர் 7 ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். 16 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இந்த நிலையில் யாருடைய தேவைக்காக இந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று முற்படுகின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

இப்போது சஜித் என்ற பயம் அனைவரையும் தொற்றியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். நீதியை, சட்டத்தினை, ஜனநாயகத்தினை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் செயலை செய்வதற்கு உரிமை கிடையாது.

ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுப்பதை விடுத்து, ஜனாதிபதி அதிகாரங்களை இல்லாமல் செய்யும் வேலையை செய்ய வேண்டியது இல்லை.
அவ்வாறு ஒன்றினை செய்வதாக இருந்தால், ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னர் செய்திருக்க முடியும்.

நான் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராக இருக்கின்றேன். எந்த காரணத்தை கொண்டும் எந்த விடயத்திற்கும் நான் பயப்படுபவன் அல்ல.
முன் வைத்தகாலை ஒருபோதும் பின் வைக்க மாட்டேன். நான் போட்டியிட தயாராகவே உள்ளேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!