முன்னாள் விமானப்படை தளபதிக்கு கௌரவ பட்டம்!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு, ‘அட்மிரல் ஒப் த பிலீட்’ எனும் கௌரவ பட்டத்தையும், முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு, ‘மார்ஷல் ஒப் த ஸ்ரீலங்கா எயார்போஸ்’ எனும் கௌரவ பட்டத்தையும் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிக்கையின் ஊடாக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ‘அட்மிரல் ஒப் த பிலீட்’ ஆகவும், முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க ‘மார்ஷல் ஒப் த ஸ்ரீலங்கா எயார்போஸ்’ ஆகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட, 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 2009 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை, கடற்படைத் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.

இரண்டு கலைமாணிப் பட்டங்களை பெற்றுள்ள முதலாவது கடற்படை அதிகாரியான கரன்னாகொட, ரோயல் கப்பல் போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

கடற்படை தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர், யுத்த காலகட்டத்தில் வட கிழக்கு உள்ளிட்ட நான்கு கடற்படை கட்டளை பிரதேசங்களுக்கான கட்டளை தளபதியாக சிறப்பான சேவையாற்றிய அவர், தனது அனுபவங்களைப் பயன்படுத்தி கடற்படையின் வளர்ச்சிக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

பணியிலிருக்கும் போதே அட்மிரல் பதவியை வகித்த, இலங்கையின் முதலாவது கடற்படை தளபதி இவராவார். ரணசூர, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய, உத்தம சேவா, பூர்ண பூமி, ரிவிரெச ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

2006 ஜூன் மாதம் 12 ஆம் திகதி விமானப் படையின் 12 ஆவது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற ரொஷான் குணதிலக்க, 2011 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

வானூர்தி நிபுணராக நீண்ட காலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 3 கடல் கண்காணிப்பு படையணி மற்றும் 4 ஆவது வானூர்தி படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.

விமானப்படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படை தளபதியாக பதவி வகிக்கையில், விமானப்படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்துள்ளார்.

ரண விக்ரம, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய மற்றும் உத்தம சேவா ஆகிய பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார். இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முன்னாள் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!