யாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில்!

இராணுவ உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும், குடும்ப பெண் ஒருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விளக்கமறியல் உத்தரவினை மல்லாகம் நீதவான் நீதிமன்று விடுத்துள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவிலில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் முகங்களை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டி, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்து, வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அத்தோடு, வீட்டில் இருந்த மடிக்கணி,அலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றனர்.

குறித்த கும்பலின் தாக்குதலில் அவ்வீட்டின் குடும்பத்தலைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்,  தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற தினமே புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரைக் கைது செய்தனர். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட பொருள்கள் பிறிதொரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.

இதேவேளை பொருட்கள் மீட்கப்பட்ட வீட்டில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் வசித்து வந்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியவரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை திருடப்பட்ட, நகைகள், மடி கணினி, 4 அலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருள்களையும் சுன்னாகம் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!