பயிலுனர் பட்டதாரிகளுக்கு 5 நாள் பயிற்சி நெறி

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களில், நீதி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு, 5 நாள் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் கீழுள்ள இலங்கை மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால், அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களில் பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி நெறி, நேற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் 13 தமிழ் பேசும் பிரதேச செயலகங்களில் இருந்தும் 13 பயிலுனர் பட்டதாரிகள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இவ்வாரம்ப நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.நழீல், அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஐ.எல்.ஹாசீம் மற்றும் மத்தியஸ்த சபை ஆணைக் குழுவின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்றுனர் எம்.ஐ.எம்.ஆஸாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி நெறியில், அவர்களினது கடமைகள், பொறுப்புகள், எதிர் கால நடவடிக்கைகள், மத்தியஸ்த சபைகளின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்ப நாள் நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.

நீதித்துறை மற்றும் சட்டத்துறை பற்றிய ஆரம்ப அறிவினை பாடசாலைக் கல்வியில் இணதைத்துக் கொள்ளப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் லியாகத் அலி தெரிவித்தார்.

இத்துறைகள் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்றுக் கொள்ளும் போது அடிப்படைச் சட்டங்கள், குற்றங்கள், தண்டனைகள் பற்றிய அறிவினை கற்றுக்கொள்வார்கள். இதனால் அதிகளவிலான குற்றங்களை தடுத்துக் கொள்ள முடிவதுடன், அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவீனங்களின் பெரும் பகுதியனையும் குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!