சர்வதேச ஓசோன் தினம் இன்று !

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வு, சர்வதேச ஓசோன் தினம் மற்றும் மொன்றியல் உடன்படிக்கையின் 32 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவற்றுடன் இணைந்ததாக இடம்பெறும், ‘வளி மாசடைதல்’ பற்றிய சுவரொட்டி வடிவமைத்தல் கண்காட்சியையும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, திறந்து வைத்தார்.

‘மொன்றியல் உடன்படிக்கையில் மேற்கொள்ளப்பட்ட கிகாலி திருத்தம் மற்றும் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான அதன் பங்களிப்பு’ எனும் தலைப்பில், மொரட்டுவை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே.பெரேரா, நிகழ்வில் விசேட உரை ஆற்றினார்.

இலங்கை, மொன்றியல் உடன்படிக்கையின் பங்குதாரராக உள்வாங்கப்பட்டதன், 30 ஆவது நிறைவை முன்னிட்டு, நினைவு முத்திரையொன்று வெளியிடப்பட்டது.


‘வளி மாசடைதலை குறைத்தல்’ எனும் தொனிப்பொருளில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும், இதன் போது ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, சூழல் நேய உபகரணங்களை வழங்குதல், சுங்க திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச மொன்றியல் உடன்படிக்கை விருதுகளும் வழங்கப்பட்டன.

மொன்றியல் உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளினாலும், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 16 ஆம் திகதி சர்வதேச ஓசோன் தினம் கொண்டாடப்படுவதுடன், இலங்கையும் அதனை இடைவிடாது தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கை, ஓசோன் படலத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் முன்னிலை வகிப்பதோடு, ஓசோன் படலத்தை பாதிக்கும் வாயுக்களை வெளியேற்றும் உபகரணங்களின் பாவனையை தடை செய்வதில் மிக முன்னிலை வகிக்கும் நாடாக கருதப்படுகின்றது.

மொன்றியல் உடன்படிக்கைக்கமைய ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பாவனைகளில் இருந்து, இலங்கை 2020 ஆம் ஆண்டில் 35 சத வீதமும், 2025 ஆம் ஆண்டில் 67.5 சத வீதமும், 2030 ஆம் ஆண்டில் 100 சத வீதமும் விலகியிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் பிரதி வதிவிட பிரதிநிதி பைசா எபென்ட் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!