ஈபில் கோபுரத்தின் உயரத்தை மிஞ்சும் தாமரைக் கோபுரம் இன்று திறந்து வைப்பு!

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள, தெற்காசியாவின் மிக உயர்ந்த தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால், இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு தாமரைக் கோபுரமானது, வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் அலைவரிசை ஒலிபரப்பை எண்மான அடிப்படையில் அதாவது டிஜிற்றல் முறையில், ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும், மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் வழங்கியிருந்தனர்.

இந்த கோபுரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரி ஒலிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

3ம் மற்றும் 4ம் மாடிகள் நிகழ்வுகள் மற்றும் விழா மண்டபங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில், பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தாமரை கோபுரத்தின் நினைவாக, இலங்கை தபால் திணைக்களத்தினால் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த முத்திரை 45.00 ரூபா பெறுமதியில் வெளியிடப்பட்டதுடன், இதனை கலைஞர் பசுபிட்டியேஜ் இசுரு சதுரங்க உருவாக்கியுள்ளார்.

நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சமூகமளிக்கவில்லை.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவர், உட்பட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சீனாவின் எக்சிம் வங்கிக் கடனின் உதவியுடன், 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில், இந்த கோபுரத்தை அமைக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரமானது, பிரான்ஸின் 300 மீற்றர் உயரமான ஈபில் கோபுரத்தை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!